அனுப்புநர்
பணியாளர்கள் மற்றும் அலுவலர்,
(பின் இணைப்புப் பட்டியலில்
உள்ளபடி)
மேல்முறையீட்டு துணை ஆணையர்,
(வணிக வரிகள்),அலுவலகம்,
பொள்ளாச்சி
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை 600009.
"உரிய முறை வழியாக”
பெருமதிப்புக்குரிய அம்மையீர்!
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது
கனிவான கவனத்திற்கு, வணிக வரித்துறையின் பணியாளர்கள் மற்றும்
அலுவலர்களது அவசரக் கோரிக்கையானது
பின்வருமாறு பணிவுடன் சமர்ப்பிக்கப் படுகிறது.
செய்தி வெளியீடு மற்றும் மக்கள்
தொடர்புத் துறையின் செய்தி வெளியீடு எண் 589 நாள் 8 -10 -2012 இன் மூலம் மாண்புமிகு
வணிகவரித் துறை அமைச்சர் அவர்கள் வணிக வரித் துறை உயர்
அலுவலர்களுடன் நடத்திய கலந்துரையாடல் பற்றி அறிந்தோம். அதில் மாண்புமிகு அமைச்சர்
அவர்கள் இத்துறை 2012 -2013 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சென்ற ஆண்டினைக்காட்டிலும் 26 % கூடுதலாக வருவாய் ஈட்டி உள்ளதாகத்
தெரிவித்திருந்தார். இது இத்துறையில் பன்னெடுங்காலமாகப் பணியாற்றும் எங்களுக்கு
மிகுந்த மகிழ்ச்சியினை அளித்தது.
இருப்பினும் இத்துறையில் காலியாக
உள்ள உதவி
ஆணையர், துணை வணிகவரி அலுவலர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற 1325 பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
மூலம் ஆட்கள் தேர்வு செய்ய தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வரைவு அனுப்பியிருப்பதாக அறிந்தோம். நாங்கள் 26 % கூடுதல் வருவாயை ஈட்டியதற்கு மாண்புமிகு
அமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்திற்கு மகிழ்ச்சியடையும் அதே நேரத்தில் நேரடி
நியமனம் மூலம் உதவி ஆணையர் , துணை வணிக வரி அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள நிரப்பப்படும்
என்பதைக் கேட்கும் போது எங்களால் எங்களது வருத்தத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இத்துறைக்காக நாங்கள் கடுமையாக
பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையில் பன்னெடுங்காலமாகப் பணியாற்றி வருகின்றோம்.
இருப்பினும் எங்களது நியாயமான பதவி உயர்வுகள் பல்வேறு காரணங்களுக்காக
தாமதப்படுத்தப் படுகின்றது. இந்நிலையில் எங்களது கனவுப் பதிகளான உதவி ஆணையர், துணை வணிகவரி அலுவலர் போன்றவைகளை நேரடி
நியமனம் மூலம் நிரப்பிவிட்டு பதவி உயர்வுகள் தாமதப் படுவதால் நாங்கள் மனதளவில்
பல்வேறு துன்பங்களுக்கு ஆட்படுகிறோம்.
ஒவ்வொரு துறையிலும் நேரடி
நியமனங்கள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புதல் என்பது நடைமுறையில் உள்ள ஒன்றாக
இருப்பினும் தற்போது வணிக வரித் துறையில்
செய்யப்படப் போகும் 1325 பணியிடங்களுக்கான
அளவு நேரடி நியமனங்கள் என்பது வேறு எந்தத்துறையிலும் இதுவரை நடைபெற்று இருக்க
வாய்ப்பில்லை என்று கருதுகிறோம்.
நேரடி நியமனங்கள் மூலம் செய்ய
உத்தேசித்துள்ள உதவி ஆணையர் , துணை வணிக வரி அலுவலர், உதவியாளர் ஆகிய பணியிடங்களைக் கருத்தில் கொண்டால்
வருவாய்த் துறையில் துணை வணிக வரி அலுவலர் நிலைக்கு ஒப்பான துணை வட்டாட்சியர் பணி இடத்துக்கு நேரடி நியமனம் செய்யப்படுவது
இல்லை. இது அத்துறையில் உள்ள இள நிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இரு நிலை பணியாளர்களுக்கும் பதவி
உயர்வுக்கு ஏற்றதாக துறையின்
பதவி உயர்வு சூழ்நிலை உள்ளது. ஆனால் துணை வணிக வரி அலுவலர் மற்றும் உதவியாளர் நிலையில் வணிக வரித் துறையில் நேரடி நியமனம் செய்யப்பட்டால் இள நிலை உதவியாளர்கள் , உதவியாளர் பதவி பெறுவதே கடினமாக
இருக்கும். பிறகு துணை வணிக வரி அலுவலர் பதவி என்பது அவர்களது ஓய்வு பெரும் போது
அடையப்போகும் அதிக பட்சப் பதவியாகவே ஆகிவிடும். ஏனெனில் நேரடி நியமனம் மூலம் உதவியாளர்கள் ஆனவர்கள் எளிதில் துணை
வணிக வரி அலுவலர் பதவி
உயர்வு பெற்று விடுவர். இதே போல் பதவி உயர்வின் மூலம் துணை வணிக
வரி அலுவலர் ஆனவர்களைவிட நேரடி
நியமனம் மூலம் துணை வணிக வரி அலுவலர்
ஆனவர்கள் எளிதில் பதவி
உயர்வு பெற்றுமேல் நிலைப் பதவிகளை அடைவர். துணை வணிக வரி அலுவலர் மற்றும் உதவியாளர் நிலையில் நேரடி நியமனம் செய்யப்படும் போது தொகுதி 4 இல் நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களின் பதவி
உயர்வுக்கான வழிகள் தடைப்பட்டுவிடும். இதனால் வருவாய்த் துறையில் உள்ள இள நிலை உதவியாளர்களின் பதவி உயர்வு வாய்ப்பில் 50 % மட்டுமே வணிக வரித் துறையில் உள்ள இள நிலை உதவியாளர்களுக்கு கிடைக்கிறது.
இது இவ்வாறு இருக்க பதவி உயர்வின் மூலம்
துணை வணிக வரி அலுவலர் ஆனவர்கள் நேரடி நியமனம் மூலம் துணை வணிக வரி அலுவலர் ஆனவர்களை விடவும் காலம்
தாழ்த்தியே பதவி உயர்வினைப் பெறுகிறார்கள். இது தற்போது வெளியிடப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டிற்கான வணிக வரி அலுவலர் பட்டியலில் தெளிவாகக்
காணலாம். 2012
ஆம் ஆண்டிற்கான வணிக வரி அலுவலர் பட்டியலில் 2008 ஆம் ஆண்டு நேரடி நியமனம் மூலம் பதவி பெற்ற துணை வணிக வரி அலுவலர்
மட்டுமே வணிக வரி அலுவலர் ஆகியுள்ளனர். பதவி உயர்வின் மூலம் 2007 ஆம் ஆண்டுக்கான துணை வணிக வரி
அலுவலர் பட்டியலில் துணை வணிக வரி அலுவலர் ஆன ஒருவர்கூட 2012 ஆம் ஆண்டிற்கான வணிக வரி அலுவலர் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. இது பதவி உயர்வில் விளைந்த
பாரபட்சமாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இதனால் பதவி உயர்வின் மூலம் துணை வணிக வரி அலுவலர் ஆன வர்கள் பணி மூப்பிலும்
ஊதியத்திலும் கிடைக்க வேண்டிய நியாயமான பலன்களைக் கிடைக்கப் பெறாமல் இருக்கிறார்கள்.
இப்படி இருந்தால் கூட துறைக்காக இவர்கள் கடுமையாக உழைத்துக்
கொண்டு இருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
சம்பந்தப் பட்ட செய்திக் குறிப்பில்
கண்டுள்ளபடி துறையானது 1325 காலிப்
பணியிடங்களுடன் செயல்பட்ட போதிலும் 26 % வருவாயை கூடுதலாக 2011 -12 இன் முதல் அரையாண்டினை விடவும்
தற்போது ஈட்டியுள்ளது. இது முற்றிலும் தற்போது பணியிலிருக்கும் பணியாளர்களையும்
அலுவலர்களையுமே சாரும். இப்படிப்பட்ட கடும்
உழைப்பாளிகளின் சேவையைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் முறையான பதவி உயர்வினை
வழங்கி இப்படிப் பட்டவர்களின் சேவையை மேலும் பயனுள்ளதாக துறை பயன் படுத்திக் கொள்ள
வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் , நேரடி நியமனங்களின் மூலம் புதிய
பணியாளர்கள் மற்றும் அலுவலர்களை நியமிக்கும் முன்னர், நேரடி நியமனங்களின் பாதகங்களையும்
உள் ஒதுக்கீட்டு(உள்வழி : Internal Recruitment) நியமனங்களின் சாதகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். (Disadvantages of Direct Recruitment and Advantages of Internal
Recruitment ).
மிகக் குறுகிய எதிர்காலத்தில் சரக்கு
மற்றும் சேவை வரி
என்பது தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப் படலாம் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும்
இருக்கின்றது. அதற்கு துறை தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டிய முக்கிய மான கால கட்டத்தில்
இருக்கின்றது என்று நாங்கள் கருதுகின்றோம். தற்போதுள்ள இவ்வாறான நெருக்கடியான சூழ்
நிலையில் வணிகவரித் துறையானது GST இனை நடைமுறைப் படுத்தினால் முன் அனுபவம் அற்ற
உதவி ஆணையர்களால் துறையினை செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகத்துக்கு
இடமாயுள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டும், ஏற்கனவே தமிழ் நாடு பொது விற்பனை வரிச் சட்டத்திலிருந்து துறையினை
மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்துக்கு திறம்பட மாற்றிக் கொண்டு வந்த பன்னெடுங்கால
கிடைத்தற்கரிய அனுபவங்களைக் கொண்டுள்ள தற்போதுள்ள அலுவலர்களது சேவையை முறையாகப்
பயன் படுத்திக்கொள்ளும் பொருட்டும் உள் ஒதுக்கீட்டு(உள்வழி : Internal
Recruitment)
நியமனங்கள் மூலம் தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமே தேர்வுகளை நடத்தி
உதவி ஆணையர் மற்றும் துணை வணிக வரி அலுவலர் பணியிடங்களை
நிரப்பிக்கொள்ளலாம் எனவும் பணிவுடன் கருத்தினைத் தெரிவிக்கிறோம்.
உள் ஒதுக்கீட்டு (உள்வழி : Internal
Recruitment) நியமனங்கள்
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் செயல்பாட்டில் உள்ளது. எடுத்துக் காட்டாக
இந்தியன் ரயில்வேஸ், கண்டெய்னர்
கார்ப்பரேசன்,
LIC, போன்றவை. இவைகள்
சிறப்பாகச் செயல்பட இதுவும் ஒரு காரணம். மேலும் தமிழகத்தில் நகராட்சி ஆணையர் பணியிடத்திற்கு உள்
ஒதுக்கீடு நகராட்சிப் பணியாளர்களுக்கும் உள்ளது.
மேலும் நாங்கள் தற்போது மன்றாடிக்
கேட்டுக் கொள்வது என்ன வென்றால் , நேரடி நியமனங்கள் துறையின் உண்மையான பணியாளர்களுக்கும்
அலுவலர்களுக்கும் உண்டான நியாயமான பதவி உயர்வுகளைப் பாதிக்கின்றன எனவே நேரடி
நியமனங்கள் மூலம் செய்ய உத்தேசித்துள்ள உதவி ஆணையர், துணை
வணிகவரி அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு இந்தப் பதவிகளுக்கான உரிய
பரிந்துரைக்கப் பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள துறையின் பணியாளர்/அலுவலர்கள்
ஆகியோரை மட்டுமே உள்வழி (Internal
Recruitment)
நியமனங்கள் மூலம் தொகுதி
I மற்றும் தொகுதி II ஆகிய தேர்வுகளை எழுத
அனுமதிக்குமாறும், இன் நடைமுறைக்கு வயது வரம்பின்
உச்சவரம்பினை ரத்து செய்யவும் வேண்டுமாய்ப்
பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நேரடி நியமனங்களும் நடை பெரும் துறைக்கும் தகுதி
வாய்ந்த சிறப்பான முன் அனுபவம் கொண்டவர்களும் அவரவர் தகுதிக்கான நியாயமான
பதவியினையும் அடைவார்கள் எனவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ் வகை உள் ஒதுக்கீடு செயல்
படுத்தும் போது முறையான இட ஒதுக்கீட்டினையும் கடைப்பிடிக்கலாம் எனவும், பெரும் பாலான அலுவலர்கள் உதவி
ஆணையருக்கான அடிப்படை ஊதியத்தை ஏற்கனவே எட்டிவிட்டதால் அரசுக்கு கூடுதல் நிதிச்
சுமை வராது எனவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் துறை மூலம் சம்பந்தப்
பட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பணியாளர்கள்/அலுவலர்கள் ஆகியோரைப் பற்றிய அடிப்படை விவரங்களை
ஏற்கனவே துறையானது சரி பார்த்து விட்டபடியால் தேர்வாணையத்தின் சரிபார்க்கும்
வேலைப் பளுவும் கணிசமாகக் குறையும் எனவும், மேலும் உடனடியாக தேர்வுகளை
நடத்தி பணி நியமனங்களை மிகவும் விரைவாக
வெளியிடலாம் எனவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இவ்வகை நியமனங்கள்
மூலம் பணியமர்த்தப் படும் அலுவலர்களுக்கு ஏற்கனவே போதுமான துறை அனுபவங்கள்
உள்ளபடியால் புதிதாக பணிக்கு வருபவர்களுக்குத் தேவைப்படும் அடிப்படைப் பயிற்சி இவர்களுக்குத்
தேவைப்படாது எனவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவைகள் நடைமுறைப்படுத்தப் பட்டால் ஒரே
மாதத்தில் துறைக்குள்ளான உள் ஒதுக்கீட்டில் தொகுதி I தொகுதி II
ஆகிய தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் பணிவுடன்
தெரிவித்துக்கொள்கிறோம். இவைகளுக்காக உரிய திருத்தங்களை தேவையான சட்டங்களில்
செய்து துறைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் எங்களை ஆதரிக்க வேண்டுமாய்ப் பணிவுடன்
கேட்டுக் கொள்கிறோம்.
இதை நடை முறைப் படுத்தினால் துறை
பெறப் போகும் பல்வேறு பலன்களுக்காக இக்கருத்துகளை கனிவுடன் பரிசீலிக்குமாறு
பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் நாங்கள் மாண்புமிகு
வணிகவரித்துறை அமைச்சர் அவர்களுக்கு பணிந்தனுப்பிய கோரிக்கைகளின் நகல்களையும் மாண்புமிகு முதல்வர்
அவர்களின்
கனிவான பார்வைக்குப் பணிந்தனுப்புகிறோம்.
இறுதியாக மகாகவி பாரதியாரின்
முத்தான வரிகளை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மாண்புமிகு முதல்வர் அவர்களைப்
பணிவுடன் பின்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்:
"எமக்கு வல்லமை தாரீரோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!"
இப்படிக்கு,
பணியாளர்கள் மற்றும் அலுவலர்,
(பின் இணைப்புப் பட்டியலில்
உள்ளபடி)
மேல்முறையீட்டு துணை ஆணையர்,
(வணிக வரிகள்),அலுவலகம்,
பொள்ளாச்சி
நகல் : மாண்புமிகு வணிகவரித் துறை
அமைச்சர் அவர்கள், புனித
ஜார்ஜ் கோட்டை,
சென்னை அவர்களுக்கு பணிந்தனுப்பப்
படுகிறது.
நகல் : செயலாளர், வணிகவரித் துறை ,அவர்களுக்கு பணிந்தனுப்பப்
படுகிறது.
நகல் : ஆணையர் , வணிகவரித் துறை , எழிலகம், சேப்பாக்கம்,சென்னை அவர்களுக்கு பணிந்தனுப்பப் படுகிறது.
No comments:
Post a Comment